2025-26 நிதியாண்டில் தெற்கு ரயில்வே ரூ.13,778 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக சென்னை நகரில் அதன் பொதுமேலாளர் சு. ப்பாராவ் தெரிவித்தார்.

பெரம்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய அவர், இந்த வருவாய் முந்தைய ஆண்டை விட 8.84% அதிகம் என கூறினார்.

மேலும், நடப்பு நிதியாண்டில் ஜூலை வரை, கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வருவாய் 6% வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் 76.76 கோடி பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டதாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 4.7% அதிகம் என்றும் கூறினார்.

மின்சார உற்பத்தி தொடர்பாக, சோலார் மின் நிலையங்கள் மூலம் 62.30 லட்சம் யூனிட் மற்றும் காற்றாலைகள் மூலம் 2.80 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் ரூ.25 கோடி சேமிப்பு ஏற்பட்டதாகவும், பழைய இரும்பு உள்ளிட்ட பயன்படுத்த முடியாத பொருட்கள் விற்பனையில் ரூ.539 கோடி வருவாய் கிடைத்ததாகவும், இது ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட அதிகம் என்றும் கூறினார்.