கர்நாடக மாநில வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், தமிழக அரசு மவுனமாக இருக்கக் கூடாது என்றும், கர்நாடக அரசிடம் தனது கண்டனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக வனத்துறையினர் தொடர்புடையதாக கூறப்படும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத கொடூரச் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் முயற்சிகள் நடப்பதாகத் தோன்றுவதாகவும், அதைத் தவிர்த்து வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து வெளிப்படையான, பாரபட்சமற்ற நீதிவிசாரணை நடத்தி காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசு பணியும் கிடைக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேகதாது விவகாரத்தைப் போல இதிலும் வாய்மூடி இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.




