தமிழகத்தில் சமக்ர சிக்‌ஷா திட்ட நிதியை போதுமான அளவில் பயன்படுத்தாதது, ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகள் தொடங்குவதில் தாமதம் ஆகியவை கல்வித்துறையை பெரிதும் பாதித்துள்ளதாக பார்லிமென்ட் மதிப்பீட்டு குழு கவலை தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. லோக்சபா எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையிலான குழு, மலிவான மற்றும் தரமான கல்விக்கான பட்ஜெட்–கொள்கை அம்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 2024–25 நிதியாண்டில் ‘பிரபந்த்’ இணையதளத்தில் காட்டப்படும் நிதி பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் அடிப்படை வாசிப்பு–எண்ணறிவு தேசிய முயற்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3,029 கோடியில் ரூ.1,847 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிதி பயன்பாடு குறைவாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.152 கோடியில் மாநிலம் ரூ.10 கோடி மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திட்ட செயல்பாட்டை தாமதப்படுத்தும் அமைப்பு ரீதியான தடைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தமிழகம் பின்தங்கியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. 2025 நவம்பர் 1 நிலவரப்படி நாடு முழுதும் அனுமதிக்கப்பட்ட 50,414 பணியிடங்களில் 8,457 காலியிடங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக 726 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதை தமிழகம் இன்னும் ஏற்கவில்லை என்பதால் அனுமதிக்கப்பட்ட பல பள்ளிகள் செயல்பாட்டுக்கு வரவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது. நிலம் கிடைக்காதது, தற்காலிக இடவசதி, நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு சிக்கல்கள் போன்றவை தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளன; இதனால் தகுதியான மாணவர்கள் தரமான கல்வி வாய்ப்பை இழக்கிறார்கள் என்றும் எச்சரிக்கிறது.

தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலை கல்வி நிலைக்கு செல்லும் போது மாணவர் சேர்க்கையில் 73% சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், கல்வி எளிதில் கிடைக்க தற்போதுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை முழுமையான மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது அவசியம் என்றும் குழு தெரிவித்துள்ளது.