சென்னையில் நடைபெற்ற எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் என்பதே இலக்கு என தெரிவித்தார்.
பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், “வளர்ச்சி அடைந்த இந்தியா” என்பது சாத்தியமே என்றும், மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பொருளாதார நாடாக மாறும் என்ற நம்பிக்கையையும் அவர் கூறினார்.
மேலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி, குவாண்டம் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட முன்னேற்றத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். 100 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியதை இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் அர்லேக்கர், வாழ்க்கையில் எவ்வளவு சாதனைகள் இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம் என கூறினார். தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குவதாகவும், அறிவை தனிப்பட்ட முன்னேற்றத்திற்கே அல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




