தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டபோது அதை பாதியிலேயே நிறுத்தச் சைகை காட்டியதாகக் கூறி, காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சி தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக மாநிலம் மங்களூரு உர்வா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் படி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது. அப்போது சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பாடலை நிறுத்தச் சைகை செய்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
நிகழ்வை பதிவு செய்த கேமராவில் அந்தச் சைகைகள் தெளிவாகத் தெரிந்ததாகவும், இதை தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பாகக் கருதி ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டம்’ கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்து, ‘வந்தே மாதரம்’ குறித்து சோனியா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும், நீண்ட நேரம் நின்றிருந்த கார்கேக்கு நாற்காலி வழங்கச் சைகை செய்ததை பா.ஜ.க. தவறாக புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
புகார் அளித்த பா.ஜ.க. நிர்வாகி விகாஷ் புத்தூர், வழக்குப்பதிவு செய்யாவிட்டால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்தார். மேலும் ‘வந்தே மாதரம்’ தேசிய கீதத்திற்கு இணையானது என்றும், இதுகுறித்து காங்கிரஸுக்கு நீண்டகால வன்மம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.





