புதுடில்லி: நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயணியருக்கு வழங்கப்படும் இலவச குடிநீரின் தரம் குறித்து சிஏஜி (இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம்) ஆய்வு செய்து, சில நிலையங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஈ-கோலை உள்ளிட்ட பாக்டீரியா இருப்பது உறுதியானதாக எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வில் பல்வேறு ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த புறநகர் அல்லாத பிரிவில் உள்ள 512 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ரயில்வே வாரிய விதிமுறைகளின்படி உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது. பல நிலையங்களில் அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குடிநீர் தரத்தை மதிப்பிட, நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள் மற்றும் நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 2022–23ல் எட்டு மண்டலங்களைச் சேர்ந்த 49 நிலையங்களிலும், 2023–24ல் ஒன்பது மண்டலங்களைச் சேர்ந்த 56 நிலையங்களிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கையின்படி, கோவை, கேரளாவின் பாலக்காடு சந்திப்பு, தெலுங்கானாவின் ஹைதராபாத், மஹாராஷ்டிராவின் மும்பை, பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா மற்றும் ஜார்க்கண்டின் மதுபூர் உள்ளிட்ட நிலையங்களில் குளிரூட்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஈ-கோலை கண்டறியப்பட்டது. இவ்வாறு மாசடைந்த குடிநீரை பருகினால் கடுமையான குடல் தொற்று ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகள் வரலாம்; அரிதாக சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படலாம் எனவும் சிஏஜி எச்சரித்துள்ளது.