புதுடில்லி: மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களைப் பற்றிய சமூக வலைதளங்களில் பரவும் போலி, திரித்த அல்லது வழிதவறச் செய்யும் தகவல்களுக்கு உடனடியாக பதிலளிக்க, துறை வாரியாக ‘கியூ.ஆர்.டி.’ (விரைவு பதில் குழு) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள், திட்டங்கள், அறிவிப்புகள் போன்றவை டிஜிட்டல் தளங்களில் மிக வேகமாக பரவுவதால், தவறான தகவல்கள் பரவும்போது தாமதமின்றி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பி.ஐ.பி. உண்மை கண்டறியும் பிரிவு செயல்பட்டு வந்தாலும், துறை சார்ந்த தகவல்களை கண்காணித்து உடனடி பதில் அளிக்கும் தனிப்பட்ட அமைப்பு போதிய அளவில் இல்லை என்ற நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நடைமுறையில், ஒவ்வொரு அமைச்சகம்/துறையின் சமூக வலைதள மற்றும் டிஜிட்டல் ஊடக குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும். அந்தத் துறையின் முடிவுகள், செயல்பாடுகள், திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து வரும் பதிவுகளில் போலி, தவறான வழிநடத்தல், உண்மைக்கு மாறான அல்லது பின்னணியிலிருந்து விலகி வெளியிடப்பட்ட தகவல்கள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாக விரைவு பதில் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அதன்பின், சம்பந்தப்பட்ட துறையின் பணிகளை நேரடியாக அறிந்த அதிகாரிகள் அந்த தகவலை சரிபார்த்து, சரியான விளக்கத்தை தயாரித்து இணையத்தில் வெளியிடுவர். தேவையானால், பி.ஐ.பி. உண்மை அறியும் பிரிவுடன் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.