கோவையில் சமூக வலைதளங்களில் வரும் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு விளம்பரங்களை நம்பி பணம் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் பதிவான ஐந்து வழக்குகளில் மட்டும் ரூ.81.36 லட்சம் வரை மக்கள் மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கோவையில் நான்கு பேர் பகுதி நேர வேலை, பிட்காயின் முதலீடு, ஆன்லைன் முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயர்களில் ரூ.41.74 லட்சத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டிலிருந்தபடியே வேலை செய்து தினசரி வருமானம், கூகுள் ரிவ்யூ செய்தால் ஊக்கத்தொகை, வெளிநாட்டு விமான நிறுவனங்களில் வேலை, குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் கிரிப்டோ/ஆன்லைன் முதலீடு போன்ற ஆசை வார்த்தைகள் மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்ப வைப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி பல தவணைகளில் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வைக்கப்படுகின்றனர்.

பணம் செலுத்திய பிறகு வாக்குறுதியளித்த வேலைவாய்ப்போ அல்லது முதலீட்டுக்கான லாபமோ கிடைக்காமல் போகிறது. சில வழக்குகளில் சில மாதங்கள் சிறு தொகைகளை கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் பெரிய அளவில் மோசடி செய்வதாகவும் போலீசார் கூறினர்.

சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதள விளம்பரங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் பணம் செலுத்த வேண்டாம் என்றும், அதிக லாபம்/அதிக சம்பளம்/எளிதான வேலை என்ற வாக்குறுதிகளை நம்பி தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் எச்சரித்தனர். சந்தேகத்துக்கிடமான விளம்பரங்கள் குறித்து தேசிய சைபர் குற்றப்பதிவு தளம் அல்லது சைபர் கிரைம் போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தினர்.