கோவையில் இன்ஜினியரிங் மாணவர் கொலை சம்பவம் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாக இல்லை என்றும், வழக்கின் உண்மை நிலவரத்தை மாற்றி பேச வேண்டாம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டசபையில் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இதை கூறினார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்களை பட்டியலிட்டு பேசிய உதயநிதி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் அமுதன் கோவையில் குழுவால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறினார். இதை சட்டசபையில் முன்பு எழுப்பியபோது ‘கோஷ்டி பூசல்’ என விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இது கொலை சம்பவமே எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், செட்டிபாளையம் காவல் நிலையம் விசாரணைக்காக அமுதனை அழைத்து போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கேட்டதாகவும், பின்னர் அமுதன் தொடர்பான விவரங்கள் அந்தக் கும்பலிடம் பகிரப்பட்டதே மரணத்திற்கு காரணம் எனவும் உதயநிதி குற்றம்சாட்டினார். இதை அமுதனின் பெற்றோரும் கூறியதாக தெரிவித்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை கோரினார்.
இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தில், அமுதன் அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுடன் இருந்த முன்விரோதம் காரணமாக ஆகஸ்ட் 10 அதிகாலை 1.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று தாக்கப்பட்டதாக கூறினார். காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அதே நாளில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆகஸ்ட் 11 அன்று உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணையில் ஆகஸ்ட் 9 அன்று இரு குழுக்களுக்கிடையேயான பழிவாங்கும் தாக்குதலே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகாரிலோ விசாரணையிலோ தெரியவில்லை என்றும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





