சென்னை: தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை கடன் அளவின் அடிப்படையில் விரிவுபடுத்தினார்.

அறிவிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையும் தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்றாலும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் கடந்த மே 25-ம் தேதி குறு, சிறு உள்ளிட்ட விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50 ஆயிரம் வரை முழுத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார். விவசாய அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே கூடுதல் தள்ளுபடி முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அரசின் கணக்கீட்டின்படி, ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த கூடுதல் தள்ளுபடியால் அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழக விவசாயிகளின் நலனில் தான் மாநிலத்தின் நலன் உள்ளது எனக் குறிப்பிட்ட முதல்வர், 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.6,220 கோடி பயிர்க்கடன் இந்த அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.