ஜார்க்கண்டில் நடைபெறும் மாணவர்–இளைஞர் போராட்டத்தை முன்னிட்டு, தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு காங்கிரஸ் அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் தொடர்கிறது.

மேலும், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்ததாக கூறப்படும் நிலையில், பல மாவட்டங்களில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ராகுல் காந்தியின் உருவ பொம்மைகளை எரித்து எதிர்ப்பை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கூட்டணி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டில்லியில் நடந்த போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு அளித்ததுபோல், தங்களது போராட்டத்துக்கும் அவர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மாணவர் அமைப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.