காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் காணாமல் போனதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (TNCSC) இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறைகேடுகளை கண்காணிக்க தவறியதாகக் கூறி, மண்டல மேலாளர் அருள்வனிதா மற்றும் தரக் கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகியோரின் சஸ்பென்ஷனை மேலாண் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில், நான்கு அரிசி ஆலைகளுடன் தொடர்புடையதாக இந்த குறைபாடு இருப்பது தெரிய வந்தது. வெள்ளைகேட் பகுதியில் இயங்கும் ஒரு ஆலையில் 1,250 டன் நெல்லை அரிசியாக மாற்றவில்லை என்றும், மற்றொரு ஆலையில் 100 டன், மேலும் இரண்டு ஆலைகளில் தலா 150 டன் என மொத்தம் 1,500 டன் நெல் மூட்டைகள் அரிசியாகவும் மாற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆய்வில், அந்த அளவுக்கான இருப்பு நெல்லாகவும் அரிசியாகவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய ஆய்வின்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் கூறினர். தவறுகள் நடந்ததாகக் கூறப்படும் நான்கு ஆலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், புதிய நியமனங்கள் வரை செங்கல்பட்டு மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.





