சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஊழலற்ற ஆட்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் ‘தளபதி வெற்றி கல்வி மையம்’ திறப்பு விழாவில் பேசிய அவர், முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக ஏழை எளியோருக்கும் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
தமிழக மக்களின் நலன் காக்க முதல்வர் விஜய் உண்மையாக உழைக்கிறார் என்றும், கட்சியினரும் நேர்மையான உழைப்பின் மூலம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். தொகுதியில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் அளவுக்கு முதல்வர் பொறுப்புடன் செயல்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற கட்சிகளில் 30–40 ஆண்டுகளாக ஒரே நிர்வாகிகள் இருப்பதாகவும், ஆனால் த.வெ.க.வில் கீழே இருப்போர் மேலே வரவும், மேலே இருப்போர் கீழே இறக்கப்படவும் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார். இதனால் கட்சி நிர்வாகிகள் எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஊழலற்ற ஆட்சிக்கான முயற்சியில் முதல்வருக்கு துணை நிற்போம் என்றும் அவர் வலியுறுத்தினார்.





