சென்னை: ஊரக வளர்ச்சி துறை பணிகளுக்கான ஒப்பந்தங்களில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு (SHG) முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், மகளிர் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஊரக உள்ளாட்சிகளில் மகளிர் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட வழிவகை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், தங்கள் பகுதியில் வரும் ரூ.5 லட்சத்திற்குக் குறைவான பணிகளுக்கான டெண்டர்களில் பங்கேற்கலாம். மேலும், மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்தை மீளாத பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தக் கட்டணங்களில் சுய உதவி குழுக்களுக்கு விலக்கு அளித்து, முன்னுரிமையும் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அதேபோல், பெண் ஒப்பந்ததாரர்களுக்கும் பதிவு கட்டண விலக்கு வழங்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெண் ஒப்பந்ததாரர்களும் மகளிர் சுய உதவி குழுக்களும் தங்கள் பகுதிகளில் வரும் அரசு பணிகளுக்கான டெண்டர்களில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் அறியலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





