விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பை அனுமதித்த மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ முன்னாள் தலைவரும் தமிழக அரசின் பாடத்திட்ட வழிகாட்டு குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ பல்வேறு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வரும் நிலையில், தற்போது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

மேலும் குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்புப் பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதுவரை மத்திய அரசு மற்றும் தொடர்புடைய அமைப்புகள் மேற்கொண்டிருந்த விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை தயாரிப்பு பணிகளில் இனி தனியார் பங்களிப்பும் இடம்பெற முடியும் என்றார்.

கல்வித் துறையிலும் மாற்றங்கள் குறித்து அவர் பேசினார். மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், புதிய பாடத்திட்டம் தயாராகும் நிலையில் ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சியும் வழங்கப்படுவதாகவும் கூறினார். போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறப்பாக செயல்பட உதவும் முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.