சென்னை: சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு சட்டமன்ற மரபுக் கண்ணியம் கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தவெக அமைச்சர் ரஞ்சித், கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அவையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், அவையின் மூத்தவரான ஓபிஎஸ் கண்ணியம் குறித்து முன்பே வழிகாட்டியதாகவும், முதல்முறையாக உறுப்பினர்களாக வந்துள்ள தாங்கள் அதை கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கருத்தை முதல்வரும் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, ஓபிஎஸிடம் வேண்டுகோள் விடுத்த ரமேஷ், தங்களுக்கு கற்றுக்கொடுத்ததைப் போலவே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கும் “சிறிதளவு” கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள் என கேட்டார். முதல்வர் சட்டசபைக்குள் வரும் போது எதிர்க்கட்சி தலைவர் மரியாதை காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, எதிர்க்கட்சி தலைவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூற வேண்டிய அவசியமில்லை என்றும், ஸ்டாலின் முதல்வராக இருந்த போதும் எதிர்க்கட்சி தலைவர் எப்போதும் எழுந்தது இல்லை; அது குற்றமல்ல, அவரவர் எண்ணம் என்றும் தெரிவித்தார்.





