காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக கூறப்படும் வழக்கில், “குற்றச்சாட்டு இவ்வளவு தீவிரமானது என்றால் விசாரணை அமைப்புகள் ஏன் அமைதியாக உள்ளன?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு, பாஜவைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து தொடங்கியது. ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை (ED) விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து ராகுல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என தனி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மோகனா) விசாரணைக்கு வந்தன.

ராகுல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இது சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதாகவும் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இருப்பதாக வாதிட்டார்; சி.பி.ஐ. புகாரை ஆய்வு செய்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்றும் கூறினார். விசாரணை அமைப்புகள் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, இந்த கட்டத்தில் அமைப்புகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி மோகனா, “இது தீவிரமான வழக்கு என்றால் அமைப்புகள் ஏன் அமைதியாக இருக்கின்றன? நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் பரிசீலிக்க உள்ளதால், ஆக.20 வரை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை எந்த விசாரணை அறிக்கையையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கோ உயர் அதிகாரிகளுக்கோ சமர்ப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.