தமிழகத்தில் சுயசான்று முறையிலான கட்டட அனுமதி திட்டம், தற்போது சிறிய தொழிற்சாலை கட்டடங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளதால், ‘மினி’ தொழிற்பேட்டைகள் உருவாகும் பணிகள் தொடங்கியுள்ளதாக கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.
2024ல், 2,500 சதுரடி மனையில் 3,500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயசான்று முறையில் அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகமானது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள் அல்லது அரசியல் தலையீடு இன்றி பொதுமக்கள் அனுமதி பெற முடிந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தொழிற்சாலை கட்டடங்களுக்கும் இதே வசதி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி, 5,000 சதுரடி மனையில் 7,500 சதுரடி வரையிலான தொழிற்சாலை கட்டடங்களுக்கு சுயசான்று முறையில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானாலும், இணையதளம் உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நடைமுறைப்படுத்துதல் தள்ளிப்போனதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தற்போதைய அரசு இந்த வசதியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாகவும், இதற்கு தொழில்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுக்கான கட்டடங்களை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக துறையினர் தெரிவிக்கின்றனர்.
ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி. பாலமுருகன் கூறுகையில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பெரிய தொழில் பூங்காக்களை ஒட்டிய பகுதிகளில் 20 ஏக்கர் முதல் பல்வேறு அளவிலான நிலம் வைத்திருப்போர் அதை தலா 5,000 சதுரடி தொழிலக மனைகளாகப் பிரித்து, அடிப்படை வசதிகள் செய்து டி.டி.சி.பி. ஒப்புதல் பெற்று விற்பனை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய முயற்சிகள் தொடங்கியுள்ளன என்றும், இது சிறுதொழில் வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடும் என்றும் அவர் கூறினார்.





