சென்னை: தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான காலி நிலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க துறை முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் கோவில்களுக்கு பல இடங்களில் நிலங்கள் உள்ளன. வேளாண் பணிகள் நடைபெறாமல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களில் சூரிய மின் சாதனங்களை பொருத்தி மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்த சீராய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரே இடத்தில் 10 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் கிடைக்கும் பகுதிகளின் விவரங்களை அனுப்புமாறு மண்டல இணை ஆணையர்களுக்கு துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அமைக்கப்படும் சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு வழங்குவதன் மூலம் கோவில் வருவாயை அதிகரிக்க முடியும் என்றும், நிலமும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோவில் நிலங்களை வேலி அமைத்து பாதுகாக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.