தமிழகத்தின் பல மாவட்டங்களில் சீரற்ற மின் வினியோகம் மற்றும் தொடர்ந்து நீடிக்கும் குறைந்த மின்னழுத்தப் பிரச்னை காரணமாக தொழில் நிறுவனங்களும் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சீரான மின்சார விநியோகத்திற்காக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மின் வாரியம் தாழ்வழுத்தம் மற்றும் உயரழுத்தம் என பிரிவுகளின் கீழ் மின் இணைப்புகளை வழங்குகிறது. தாழ்வழுத்தப் பிரிவில் வீடுகள், கடைகள் மற்றும் 150 கிலோவாட் வரை இணைப்பு பெற்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. மாநிலத்தின் சராசரி தினசரி மின் தேவை சுமார் 16,000 மெகாவாட்டாக இருந்தாலும், ஏப்., மே மாதங்களில் அது பொதுவாக 20,000 மெகாவாட்டை தாண்டும்.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் முடிந்த பின்னரும் வெயில் கடுமையாக நீடிப்பதால் மின் தேவை குறையவில்லை. ஜூலை 14 அன்று மின் தேவை 21,724 மெகாவாட்டாக உச்சத்தை எட்டியதாகவும், தற்போது சுமார் 20,000 மெகாவாட்டாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘லோ வோல்டேஜ்’ புகார்கள் அதிகரித்துள்ளன.

மின்சாரம் ஏற்ற இறக்கமாக வருவதால் விசிறி போன்ற சாதனங்களை இயக்க கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதுடன், மோட்டார் பம்ப் மற்றும் ஏசி போன்றவை சரியாக இயங்கவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேலும் டிவி, பிரிஜ், மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைவதாகவும் புகார்கள் உள்ளன.

தொழில் அமைப்புகள் தரப்பில், திருவள்ளூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் உற்பத்தி தடைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதால் முழுவேகத்தில் இயங்கும் இயந்திரங்கள் திடீரென நின்று பழுதாகி நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறி, தடையற்ற மற்றும் நிலையான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.