சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் அணியின் வடக்கு மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். அரசுக்கு “இன்செக்யூரிட்டி” அதிகம் இருப்பதால் தினமும் யாரை கைது செய்யலாம் என்று பட்டியல் போட்டு கைது செய்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.
காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று கூறியதற்காக தன்னை கைது செய்ததாகவும், அந்த நடவடிக்கை திமுக தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும் அவர் கூறினார். தஞ்சாவூர் பயணத்தின் போது வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு, தங்களுக்கும் போலீசாருக்கும் உணவு, ஜூஸ் உள்ளிட்டவற்றை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
கைது செய்வதை முன்தினமே தெரிவித்திருந்தால் தஞ்சாவூரிலேயே இருந்திருப்பேன் என்றும், தேவையின்றி மக்கள் வரிப்பணத்தில் “ரோடு ஷோ” நடத்திவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், அமைச்சர்களை அடைமொழிகளில் சொன்னால்தான் மக்களுக்கு புரியும் என கூறி பல்வேறு அடைமொழிகளை பட்டியலிட்டார். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரும் வரை வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவலை தெரிவித்த மாணவரை போலீசார் “காட்டிக் கொடுத்ததால்” அந்த மாணவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். விரைவில் அமைச்சர்கள் பெரிய வழக்குகளில் சிக்குவார்கள் என்றும், திமுகவினர் இப்போது பெயில் வாங்குவது போல தவெகவினரையும் பெயில் வாங்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





