செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக தாக்கம் செலுத்தி வரும் நிலையில், மாணவர்கள் தங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலை வளாகத்தில் நடைபெற்ற 22வது பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். விழாவிற்கு பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகித்தார்.

விழாவில், ‘மஹிந்திரா அண்டு மகேந்திரா லிமிடெட்’ நிறுவனத்தின் ‘ஆட்டோமேட்டிவ் பிசினஸ்’ தலைவர் வேலுசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதுடன், மாணவ-மாணவியருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு என்பது சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மட்டும் அல்ல; பல ஆண்டுகளான விடாமுயற்சி, கடின உழைப்பை கொண்டாடும் தருணம் என்றும், ஒழுக்கம், பொறுப்பு, சமூக சேவை ஆகியவற்றுடன் வாழ்நாள் பயணத்தின் தொடக்கமாகவும் இது அமையும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் ஆராய்ச்சி திறனுக்கு உலகளவில் மதிப்பு கிடைப்பதாக குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் இந்தியா தடுப்பூசியை உருவாக்கி உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும், சமீபத்தில் கென்யா நாட்டின் சபாநாயகர் சந்தித்தபோது இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும்; மனக்கட்டுப்பாடு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். கல்வி வளாகங்களில் போதைப் பொருட்கள் புழக்கம் வேதனை தருவதாக கூறிய அவர், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ‘தேசமே முதன்மை’ என்ற வழிகாட்டும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், இன்று சிறந்ததாக கருதப்படும் அறிவியல் கண்டுபிடிப்பு நாளை காலாவதியாகலாம் என்பதால், ஒவ்வொரு நாளும் புதியதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, பல்கலை வளாகத்தில் உள்ள வேந்தர் அருங்காட்சியகத்தில் பாரிவேந்தரின் 32 அடி உயர சிலையை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார். விழாவில் தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.