சென்னை: தவெக (Tamilaga Vettri Kazhagam) அரசின் முதல் 100 நாள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை தொகுத்து முதல்வர் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். 100 நாள் ஆட்சி என்பது “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என அவர் குறிப்பிட்டார்.

வீடியோவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளாக “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைப்பு, போதைப் பொருள் ஒடுக்க 65 சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026” மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக அரசு கூறியுள்ளது. கிராமப்புற மறுமலர்ச்சி திட்டமான TN-VETTRI மூலம் சுகாதாரம், குடிநீர், சாலைகள் மேம்பாட்டிற்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு, “வெற்றி வீடு” திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.

நலத்திட்டங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு, “வெற்றி மடிக்கணினி” திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 12 லட்சம் மாணவர்களுக்கும் 1 லட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி வழங்கப்பட்டதாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விவசாயத் துறையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை, விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி ஆகியவை அறிவிக்கப்பட்டதாக பட்டியலில் உள்ளது. மேலும் திருமண நன்னாளில் தங்க நாணயம்/பட்டுப் புடவை வழங்கும் திட்டங்கள், மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம், “வெற்றி 150” என 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு, மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்காக பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி, நேரடி தொடர்பற்ற பத்திரப் பதிவு போன்ற நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.