சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் எண்ணங்களும், எழுத்துகளும் நூலை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
உரையில், பிறப்பு–இறப்பு இடையிலான பயணமே வாழ்க்கை என்றும், சமூக நலனுக்காகவும் புராதான கலாசாரத்தின் மேன்மையை பாதுகாப்பதற்காகவும் ஒருவர் செலவிடும் நேரமே அவரின் வாழ்வை வரலாறாக்கும் என்றும் அவர் கூறினார்.
ராமகோபாலன் தனக்காக அல்ல, சமுதாயத்திற்காக வாழ்ந்தவர் என குறிப்பிட்ட அவர், மதமாற்றத்தைத் தடுக்கவும் கடவுள் மறுப்புக்கு எதிராகவும் வலிமையுடன் போராடுவதற்காக 1980ஆம் ஆண்டு இந்து முன்னணி தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். தொடக்க காலங்களில் ஆதரவு குறைவாகவும் எதிர்ப்புகள் அதிகமாகவும் இருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
இளைஞர்களிடம் நல்ல கருத்துகள் சென்று, அவர்களின் ஆழ்மனதில் நல்ல விதைகளாக விதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ராமகோபாலன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்றும், சனாதனம் இந்த மண்ணின் சொத்து; அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற சிந்தனை அவரை வழிநடத்தியதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும், “நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்” என்ற உணர்வையும் அவர் உரையில் முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத் தலைவர் விமூர்த்தானந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





