புதுடில்லி: நாட்டில் எல்.பி.ஜி. விநியோகம் பாதிக்கப்படும் சூழலில், உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக உயர்த்தும் நோக்கில் பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு முதல்முறையாக மத்திய அரசு உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்ததன்படி, மொத்தம் 21 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய்–எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு தினசரி அதிகபட்ச உற்பத்தி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை சேர்த்து தினமும் 63,810 டன் எல்.பி.ஜி. உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய போர் பதற்றத்தால் இறக்குமதி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் எல்.பி.ஜி. தேவைக்கு வெளிநாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் வினியோகத் தடை ஏற்பட்டாலும் வீட்டு உபயோக எல்.பி.ஜி. கிடைப்பதில் சிக்கல் வராமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு தினமும் 18,000 டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் 18 சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தினமும் மொத்தம் 31,470 டன் உற்பத்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி அட்டவணை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி ஆண்டுக்கு 1.31 கோடி டன்; தினசரி அடிப்படையில் இது சுமார் 35,900 டன் ஆகும்.





