புதுடில்லி: 2030க்குள் நாட்டின் ரசாயனத் துறை ஏற்றுமதி ரூ.7.73 லட்சம் கோடி வரை உயர வாய்ப்பு இருப்பதாக நிடி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதி சார்பை குறைப்பதன் மூலம் ரசாயன ஏற்றுமதியை 2030க்குள் ரூ.7.25 லட்சம் கோடி முதல் ரூ.7.73 லட்சம் கோடி வரை உயர்த்த முடியும் என அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் சிறப்பு ரசாயனங்கள் முக்கிய பங்காற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாயங்கள் மற்றும் நிறமிகள், வண்ணப்பூச்சுகள், வேளாண் ரசாயனங்கள், வாசனை மற்றும் நறுமணப் பொருட்கள் சார்ந்த ரசாயனங்கள் போன்ற துறைகளில் ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் நிடி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 2022–23ல் ரூ.10.50 லட்சம் கோடியாக இருந்த ரசாயன உற்பத்தி மதிப்பு 2030க்குள் ரூ.21 லட்சம் கோடி முதல் ரூ.26.73 லட்சம் கோடி வரை உயர வேண்டும் என அறிக்கை கூறுகிறது. இதை அடைய அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 14% வளர்ச்சி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030க்குள் நாட்டின் ரசாயன பயன்பாட்டு சந்தை மதிப்பு ரூ.27.68 லட்சம் கோடி முதல் ரூ.29.59 லட்சம் கோடி வரை உயரலாம்; இது உலக ரசாயன பயன்பாட்டில் 6% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை விரிவாக்கத்தால் 2030க்குள் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.