சென்னை: பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் தொடர்ந்து வெளிவருவதால், கற்றல் சூழல் பாதிக்கப்படுவதாகக் கவலை எழுந்துள்ளது. தடம் மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் வகுப்பறை சூழல் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. வகுப்பறையில் ‘ரீல்ஸ்’ எடுப்பது, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. 2024-ல் கரூர் மாவட்டம் குளித்தலை நாகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையிலேயே மாணவன் ஒருவர் சக மாணவிக்கு தாலி கட்டியதாக கூறப்படும் வீடியோ வெளியானது. சமீபத்தில் மதுரை விரகனூர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் தடுத்தும் ஒரு மாணவன் சக மாணவனை தாக்கியதாக கூறப்படும் சம்பவமும் கவனம் பெற்றது.

மாணவர்கள் மது அருந்தியதாக கூறப்படும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு பள்ளி மாணவியர் வகுப்பறையில் மது அருந்திய காட்சிகள் வெளியாகின. இதற்கு முன் 2014-ல் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2015-ல் திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் மாணவியர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும், 2022-ல் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஓடும் பேருந்தில் மாணவியர் மது அருந்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தாலும், பல ஆண்டுகளாக தடுக்கத் தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகள் இல்லை என்றும், பள்ளிக்கு மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வருவதைத் தடுக்கவும் போதிய முயற்சி இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. இளைஞர்களின் மீது சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வழிகாட்டுதல் அவசியம் என கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறினார்.

ஆசிரியர்–மாணவர் உறவில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும், கடந்த கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து மீண்டும் நிகழாத வகையில் அறிவியல் ரீதியான தீர்வுகள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பொது இடங்களில் ஆபத்தான நடத்தை காட்டும் மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உளவியல் ஆதரவு வழங்கவும், மாணவர் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பு குழுக்கள் அமைக்கவும் வேண்டுமென அவர் தெரிவித்தார்.