கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்து, தினசரி பயணிகள் எண்ணிக்கை சுமார் 65,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், தினமும் சராசரியாக ரூ.1.8 கோடி வருவாய் கிடைப்பதாகவும் சேலம் ரயில்வே கோட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தின் கீழ் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 94 நிலையங்கள் உள்ளன. பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும், அதிகரிக்கும் நெரிசலை சமாளிக்கவும் போத்தனூர் மற்றும் வடகோவை நிலையங்கள் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, போத்தனூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் நிலையமாக கோவை தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகவும் கூறினர்.

2025–26 நிதியாண்டில் கோவை நிலையம் ரூ.368.08 கோடி வருவாய் ஈட்டி, தெற்கு ரயில்வே பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், நிலையத்திற்கு 2.39 கோடி பேர் வந்து சென்றதாகவும், தினமும் கடந்து செல்லும் சுமார் 140 ரயில்களில் கோவைக்கு வருகை-புறப்பாடு மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை 65,000 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை சேலம் கோட்டம் பயணிகள் போக்குவரத்திலிருந்து ரூ.509.25 கோடி மற்றும் சரக்கு போக்குவரத்திலிருந்து ரூ.209.19 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். எரிபொருள் விலை உள்ளிட்ட காரணங்களால் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் இருப்பதால் ரயில் பயணம் அதிகரித்துள்ளதாகவும், கோவைக்கு இரண்டாவது முனையமாக போத்தனூர் நிலையத்தை உருவாக்க ரூ.150 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.