பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க. விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த தொழில் அந்தப் பகுதியின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாகக் கட்சி தரப்பு தெரிவித்தது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு விபத்தை காரணமாக காட்டி ஒட்டுமொத்த பட்டாசு தொழிலையும் ஒரேடியாக முடக்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். விதிகளை பின்பற்றாத ஆலைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய அவர், உரிமம் பெற்று முறையாக இயங்கும் ஆலைகளில் “ஆய்வு” என்ற பெயரில் தொழிலை முடக்குகிறார்கள் என குற்றம்சாட்டினார். இதனால் பட்டாசு விற்பவர்களும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தி.மு.க. ஆட்சியில் சிவகாசியில் பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டதாக கூறிய அவர், த.வெ.க. அரசின் பட்ஜெட்டில் பட்டாசு தொழிலாளர்களுக்கான காப்பீடு குறித்து எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமான இந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அடுத்து என்ன செய்வது என்ற அச்சத்தில் குடும்பங்கள் தவிக்கின்றன என்றும், அரசு இந்த நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதங்களிலேயே த.வெ.க. அரசு தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.