எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, எண்ணூர்–தாழங்குப்பம் சந்திப்பு சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொசஸ்தலை ஆறு–எண்ணூர் முகத்துவாரம் இடையேயான கழிமுக பகுதியில் மடுவை, காரப்பொடி உள்ளிட்ட மீன் வகைகள் பெருமளவில் செத்து மிதந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கொசஸ்தலை ஆறு, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களிலும் மீன்கள் இறந்து மிதந்ததாகவும், அழுகிய மீன்களால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து பகிங்ஹாம் கால்வாயில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதால் நீர் மஞ்சள் நிறமாக மாறுவதும், மீன்கள் இறப்பதும் தொடர்கதையாக இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுடுநீரும் நீர்வாழ் உயிரினங்களை பாதிப்பதாக அவர்கள் கூறினர்; இரவு நேரத்தில் வெளியேற்றப்பட்ட கழிவுகளே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர்.
தகவலறிந்து திருவொற்றியூர் த.வெ.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சில மணி நேர பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமை பொறியாளர் சேவியர் தலைமையிலான குழு நீர் மாதிரிகளை சேகரித்து பி.எச். மதிப்பு மற்றும் நச்சுத்தன்மை கலப்பு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டதாக கூறப்பட்டது. பரிசோதனைகளில் நீரில் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தாலும், மீன்கள் இறந்ததற்கான காரணத்தை அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
பா.ம.க. தலைவர் அன்புமணி, தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், செத்து மிதக்கும் மீன்களை அகற்றி தொற்று நோய் பரவாமல் தடுப்பதுடன், காரணமான நிறுவனங்களிடம் இருந்து தண்டத் தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் சில வாரங்கள் மீன்பிடி சாத்தியமில்லாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.




