இந்திய விண்வெளி வீரர்களுக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் தனிமைப்படுத்தல் மற்றும் பயிற்சி வசதிகளுடன் கூடிய புதிய மையத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘ககன்யாத்ரி நிவாஸ்’ என பெயரிடப்பட உள்ள இந்த கட்டமைப்பு ரூ.26.02 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த முயற்சி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பணிகளுடன் தொடர்புடையதாகும். மேலும், ‘பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்’ என்ற பெயரில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தையும் இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது.
இந்தியாவில் முழுமையான பயிற்சி மற்றும் தனிமைப்படுத்தல் மையம் இல்லாத காரணத்தால், ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட விண்வெளி வீரர்களான பிரசாந்த் நாயர், சுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் ரஷ்யாவின் காகரின் விண்வெளி மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா மையங்களில் உள்ள தனிமைப்படுத்தல் வசதிகளில் பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இந்தியாவிலேயே முழுமையான பயிற்சி வழங்கும் நோக்கில் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக இஸ்ரோ டெண்டர் கோரியுள்ளது. இந்த மையத்தில் விண்கலத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதற்கான பயிற்சி, தங்குமிடம், உடற்பயிற்சி வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
மேலும், விண்வெளி பயணத்திற்கு முன் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தனிமைப்படுத்தல் நடைமுறைகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு போன்றவை உலகத் தரத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





