திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பணியமர்த்தப்பட்டுள்ள க்யூ பிரிவு உளவு போலீசார் மீது அகதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
முகாமில் 970 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,700 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது. முகாமின் நடவடிக்கைகள் மற்றும் வெளிநபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு க்யூ பிரிவு போலீசார் பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளின் கூறுகையில், முகாமுக்கு அருகே உள்ள ஆர்.ஐ. (வருவாய் ஆய்வாளர்) அலுவலகம் சுமார் ஐந்து ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில், அந்த இடத்தை க்யூ பிரிவு போலீசார் ஆக்கிரமித்து தங்களது அலுவலகமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரசு சார்பில் அகதிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், முகாமில் பதிவு செய்துவிட்டு வெளியே வசிக்கும் சிலருக்கும் அந்த உதவி வழங்கப்பட வேண்டிய நிலையில், அவர்களுக்கான தொகையை இந்த போலீசாரே திசைமாற்றியதாகவும் அகதிகள் புகார் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகாமில் உள்ள அகதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.




