நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடந்த பெண்கள் உலக கோப்பை ஹாக்கி லீக் டி பிரிவு போட்டியில் இந்தியா, சீனா அணிகள் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தன.
8வது நிமிடத்தில் நேஹா கொடுத்த பாஸில் இந்தியாவின் நவ்னீத் கவுர் கோல் அடித்து முன்னிலை பெற்றார். 15வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை சீனாவின் ஜாங் யிங் கோலாக மாற்றி சமன் செய்தார்.
25வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் இந்தியாவின் தீபிகா கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் 39வது நிமிடத்தில் சீனாவின் மா நிங் பெனால்டி கார்னரில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இறுதியில் 2-2 என முடிந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
டி பிரிவின் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்காவை 4-0 என வீழ்த்தியது; டார்சி போர்ன், டெஸ்சா ஹோவர்டு, எலிசபெத் நியால், சோபி ஹாமில்டன் தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியத்தில் நடந்த ஆண்கள் போட்டிகளில் சி பிரிவில் ஆஸ்திரேலியா அணி அயர்லாந்தை 3-1 என வென்றது; பி பிரிவில் பெல்ஜியம் அணி பிரான்ஸை 3-2 என தோற்கடித்தது.




