சில முன்னணி தனியார் வங்கிகளில் என்.ஐ.எம். (நிகர வட்டி வருமான விகிதம்) அண்மை காலாண்டில் குறைந்ததாக வெளியான தரவுகளைத் தொடர்ந்து, அந்த வங்கிகளின் பங்குகள் சந்தையில் அழுத்தத்தை சந்தித்துள்ளன.
ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பந்தன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் என்.ஐ.எம். குறைந்திருப்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இதை நீண்டகால பலவீனமாக அல்லாமல் தற்காலிக தாக்கமாகவே பார்க்க வேண்டும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன் கூறுகையில், என்.ஐ.எம். குறைவது மட்டுமே ஒரு வங்கி பலவீனமடைந்ததற்கான ஆதாரம் அல்ல என்றார். வைப்பு தொகைகளுக்கு அதிக வட்டி வழங்க வேண்டிய நிலை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றங்கள், கடன் வழங்கலில் அதிகரித்த போட்டி, குறைந்த வருமானம் தரும் முதலீடுகளில் அதிக நிதி ஒதுக்கப்படுவது போன்ற காரணங்கள் இதற்குப் பின்னணி எனவும் குறிப்பிட்டார்.
மேலும், வங்கிகளின் செயல்திறனை மதிப்பிடும்போது மொத்த லாபம், வாராக்கடன், சொத்து தரம், மூலதன போதிய விகிதம் உள்ளிட்ட பல நிதி குறியீடுகளையும் ஒருங்கிணைத்தே பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
‘என்ரிச் மனி’ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொன்முடி.ஆர் கூறுகையில், வங்கிகளின் அடிப்படை லாபத்திறனை அளவிடும் முக்கியக் குறியீடாக என்.ஐ.எம். இருப்பதால் காலாண்டு முடிவுகளை ஆய்வு செய்யும் முதலீட்டாளர்கள் இதை தவறாமல் கவனிக்க வேண்டும் என்றார். தற்போது தனியார் வங்கி துறையே என்.ஐ.எம். அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதால், ஒரு காலாண்டில் மட்டும் ஏற்பட்ட குறைவால் பதற்றம் அடைய தேவையில்லை; ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு சுழற்சியை தொடர்ந்தால், வைப்பு வட்டி குறைய வாய்ப்புள்ளதால் எதிர்காலத்தில் என்.ஐ.எம். மீண்டும் மேம்படும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.




