செஞ்சி தாலுகா மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் பாதுகாப்பின்றி சாலையோரம் தங்க வேண்டிய நிலை உருவாகிறது எனக் கூறி கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதாகவும், அமாவாசை, மாசி தேர் திருவிழா, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் கூட்டம் லட்சக்கணக்கில் கூடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 12 அன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியதாகவும், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்ததாகவும் பக்தர்கள் கூறினர்.
கூட்டம் அதிகரித்ததால் கழிப்பறைகள் போதாமை, உள்ள கழிப்பறைகளில் நவீன வசதிகள் இல்லாமை மற்றும் பராமரிப்பு குறைவு காரணமாக கடும் அவதி ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நின்றவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை என்றும், மாலை 5 மணி முதல் ஊஞ்சல் மண்டபம் முன் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவு வரை காத்திருந்தபோதும் குடிநீர் வழங்கல் போதவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்களில் ஒரு பகுதியினர் விடியும் வரை வெட்டவெளியில் தங்க வேண்டிய நிலை இருப்பதாகவும், பெரிய அளவிலான தங்கும் வளாகம் இல்லாததால் உயிர் மற்றும் உடமை பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்றும் கூறினர். சாலையோரம் துாங்கியவர்களுக்கு கடை நடத்துபவர்கள் தண்ணீர் ஊற்றியதும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதும் போலீசார் முன்னிலையிலேயே நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால் பார்க்கிங் வசதி இல்லாமல் பெரும்பாலானவை சாலையோரம் நிறுத்தப்படுவதாகவும், ஊஞ்சல் முடியும் நள்ளிரவில் வெளியேறும் கூட்டமும் புதிதாக வரும் கூட்டமும் எதிர்திசையில் மோதுவதால் வளத்தி, வடபாலை, அவலூர்பேட்டை சாலைகளில் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், ஊஞ்சல் உற்சவத்தின் போது ஒரு பெண் பக்தர் மயங்கி விழுந்தபோது ஸ்ட்ரெச்சர், முதலுதவி குழு இல்லாததாகவும், முக்கிய இடங்களில் முதலுதவி குழு மற்றும் மொபைல் மருத்துவ அணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலைத்துறையும் அரசும் நிரந்தர திட்டங்களுடன் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




