இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் வெளிநாட்டு முதலீட்டு பிரிவு ஓ.என்.ஜி.சி. விதேஷ் (OVL), வெனிசுலாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு பணிகளை மீண்டும் விரிவுபடுத்த அமெரிக்க அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்க தடைகள் காரணமாக அங்கு முழுமையாக செயல்பட முடியாமல் இருந்த நிலையில், புதிய அனுமதியால் கூடுதல் முதலீடு செய்து உற்பத்தியை உயர்த்த முடியும் என ஓ.என்.ஜி.சி. நிதி இயக்குநர் அனுபம் அகர்வால் கூறினார்.

OVL நிறுவனம் சான் கிறிஸ்டோபல் பகுதியில் 40% பங்கையும், கரபோபோ பகுதியில் 11% பங்கையும் வைத்துள்ளது. மேலும், வெனிசுலாவிலிருந்து நிலுவையில் உள்ள ரூ.4,773 கோடிக்கும் அதிகமான டிவிடெண்ட் தொகையை பெறுவதற்கான வாய்ப்பும் இதனால் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

சான் கிறிஸ்டோபல் பகுதியில் 2025-26 நிதியாண்டில் 2.65 லட்சம் டன் அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பதிவாகியுள்ளது; இது அந்தப் பகுதியின் முழுத் திறனில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. வெனிசுலாவில் 30,300 கோடி பீப்பாய் அளவுக்கு நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாகவும், அங்கு உற்பத்தியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியது.