இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் மழையால் சுமார் நான்கரை மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 460 ரன் எடுத்தது. நேற்று 43 ஓவர் மட்டுமே வீசப்பட்டது.

288/2 என்ற நிலையில் மீண்டும் தொடங்கிய இந்திய அணிக்கு தேவ்தத் படிக்கல்–ரிஷாப் பன்ட் இணை நம்பிக்கை அளித்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தபோது, கேஷரா நுவந்தா சுழலில் பன்ட் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் 77 ரன்னில் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆன கே.எல். ராகுல் மீண்டும் களமிறங்கி, அசிதா பெர்னாண்டோ மற்றும் கேஷரா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த பின்னர் 82 ரன்னில் வெளியேறினார்.

மறுமுனையில் தொடர்ந்து தாக்குதலாக விளையாடிய படிக்கல், அசிதா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 150-ஐ கடந்தார். அவர் 167 ரன் (1 சிக்சர், 15 பவுண்டரி) எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூர்யா சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 13 ரன்னில் நிலைக்கவில்லை.

துருவ் ஜுரெல் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேஷரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய அவர், லிகிரு குமாரா வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரிகளும் அடித்தார். 66 பந்தில் அரைசதம் எட்டிய ஜுரெல் 51 ரன்னில் வெளியேறினார். பின்னர் மானவ் சுதார் 24, முகமது சிராஜ் 11 ரன் எடுத்தனர்; குல்தீப் யாதவ் 12, பிரசித் கிருஷ்ணா 1 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். மேலும், இலங்கைக்கு எதிராக டெஸ்டில் 3வது இடத்தில் களமிறங்கி ஒரு இன்னிங்சில் 150-ஐ கடந்த மூன்றாவது இந்திய வீரராக தேவ்தத் படிக்கல் இடம்பிடித்தார்; இதற்கு முன் ராகுல் டிராவிட் மற்றும் புஜாரா இந்த சாதனையை செய்திருந்தனர்.