சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் தொடர்ந்து நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் துறைக்கான ஆட்கள் தேர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்தை கடந்ததால் இந்த பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2021ல் வெளியிடப்பட்ட அரசாணையில், 2ம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.க்கள் வரை வார விடுமுறை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வார விடுமுறை வழங்கப்பட்டாலும், மாவட்டங்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், போதிய காவலர்கள் இல்லாததால் அரசாணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது நீதிமன்றம், அரசாணை பிறப்பிக்கும் முன்பே நடைமுறை சிக்கல்களை பரிசீலித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், வார விடுமுறை வழங்கப்படாததால் காவலர்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி அரசாணையை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது. இருப்பினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் வார விடுமுறை வழங்குவதில் தடைகள் தொடர்வதாக காவலர்கள் கூறுகின்றனர்.
காவலர்கள் கூறுகையில், 2ம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.க்கள் வரை தற்போது சுமார் 65,000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளன. புதிய ஆட்கள் தேர்வு தள்ளிப்போனதால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பல மாவட்டங்களில் வார விடுமுறை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் சிக்கல் நீடிப்பதாகவும் தெரிவித்தனர்.





