காவிரி நீர் விவகாரத்தில் மாநில விவசாயிகளின் நலனை பாதுகாப்பது தனது பொறுப்பு என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். குடகு மாவட்டம் பாகமண்டலாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதை கூறினார்.
கர்நாடகாவில் உள்ள அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் சவாலுடன் சட்டத்தையும் பின்பற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கூறினார். இரண்டும் சம அளவில் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக எல்லைக்குள் அணை கட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக சிவகுமார் தெரிவித்தார். மேலும், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அளித்த பதிலில், மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் வழங்குவதில் பாதிப்பு இருக்காது என கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக கூறிய அவர், சட்டப்படி நடக்கவில்லை என்றால் அணையின் கட்டுப்பாட்டை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என எச்சரித்தார்.
மேலும், மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையின் விதியாக இருப்பதாகவும், மழைக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமென கலெக்டர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





