தமிழக அரசுத் துறைகளில் மூன்று லட்சத்துக்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, மொத்தம் 821 பேரை மட்டுமே தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, குரூப்-2 தேர்வில் 41 பணியிடங்களும், குரூப்-2ஏ தேர்வில் 780 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்த காலியிடங்களுடன் ஒப்பிடும்போது அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குரூப்-2 பிரிவில் சில பதவிகளுக்கான காலியிடங்கள் ஒற்றை இலக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலாளர் உதவி ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகள் இதில் இடம்பெறுகின்றன.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறுகையில், காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் பணியில் உள்ள ஊழியர்களின் பணிச்சுமை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளில் 2,000க்கும் மேல் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கு மட்டும் சுமார் எட்டு லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என்பதால், குறைந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினர்.