திருநெல்வேலி: பெண்கள் குறித்து அவதூறாகவும் இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) துணை பொதுச்செயலர் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க. போட்டியிட்டதைப் போல, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற கட்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

பெண்களை தாய்க்கு மேலாக மதித்து பாதுகாப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக முதல்வர் விஜய் இருந்து வருவதாகவும் அவர் கூறினார். த.வெ.க. ஆட்சியில் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முதல்வரின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், விரைவில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் கூறினார்.