சென்னை: விமர்சனங்களையும் எதிர்கருத்துகளையும் எதிர்கொள்வதில் த.வெ.க. அரசு தி.மு.க. பின்பற்றிய பாதையிலேயே செல்கிறது என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதே தி.மு.க. ஆட்சி வீழ்ச்சியடைய காரணமாக இருந்ததாக குறிப்பிட்டார். அதே போக்கு தற்போது த.வெ.க. அரசிலும் உருவாகிறதோ என்ற அச்சம் இருப்பதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விமர்சனங்களை முன்வைத்த 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தன் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படும் த.வெ.க. தொண்டருக்கு பதிலளித்த ‘வீ தி லீடர்ஸ்’ தன்னார்வலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம் என்றாலும், ஆட்சியை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று தெரிவித்தார்.
முதல்வரை மகிழ்விக்கும் எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்போர் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும், முதல்வர் விஜய் ஒரு கட்சித் தலைவர் மட்டுமல்ல; அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர் என்றும் அவர் கூறினார். சிறிய விமர்சனங்களுக்குக் கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது எனக் கூறி, இதை உடனடியாகத் தடுத்து ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.





