முக்கிய ரயில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
சென்னை–மேற்கு வங்கத்தின் ஹவுரா இடையிலான முக்கிய ரயில் வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் தொகுப்பு
அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து திட்டங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், அதில் நான்கு ரயில்வே சார்ந்தவை, ஒன்று நெடுஞ்சாலை திட்டம் என்றும் அவர் கூறினார். ரயில்வே திட்டங்களில் ஒன்றாக கட்டாக்–பாரதீப் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதைகள் அமைத்து அந்தப் பகுதியை நான்கு வழியாக மாற்றும் திட்டமும் இடம்பெறுகிறது.
மொத்த செலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பலன்கள்
இந்த திட்டங்களுக்கு ரூ.13,041 கோடி மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னை–ஹவுரா வழித்தடம் நாட்டின் முக்கிய ரயில் வழித்தடங்களில் ஒன்றாக இருப்பதால், நான்கு வழியாக மாற்றுவதன் மூலம் அதிக ரயில்களை இயக்கவும், சரக்கு போக்குவரத்தை எளிதாக்கவும், பராமரிப்பு பணிகளை சீராக மேற்கொள்ளவும் முடியும் என்றார்.
கும்மிடிப்பூண்டி–கூடூர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு
ஆந்திரா–தமிழகம் எல்லைப் பகுதியில் உள்ள 90 கி.மீ நீளமான கும்மிடிப்பூண்டி–கூடூர் வழித்தடத்தையும் நான்கு வழியாக மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இயந்திரம், ஆட்டோமொபைல், மருந்து, ரசாயனம், மின்னணு உதிரிபாகங்கள் போன்ற தொழில்கள் வளர்ந்து வரும் இந்தப் பகுதியில், ரூ.2,229 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், ஸ்வர்ணமுகி நதியின் குறுக்கே 360 மீட்டர் நீள மெகா பாலம் அமைப்பதும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் 61 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.





