சைபர் குற்றங்கள், போலி சிம்கார்டு பயன்பாடு மற்றும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனப்படும் மோசடிகள் அதிகரிப்பதை முன்னிட்டு, சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
புதிய வழிமுறைகளின்படி, சிம்கார்டு வாங்குபவர்களின் விவரங்கள் உடனடியாக சரிபார்க்கப்பட வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஆய்வு செய்து அடையாளத்தை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய சிம்கார்டுகளின் எண்ணிக்கைக்கும் வரம்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அதிகபட்சம் 9 சிம்கார்டுகள் வைத்திருக்கலாம்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 சிம்கார்டுகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘டிஜிட்டல் இண்டலிஜென்ஸ் பிளாட்பார்ம்’ வழியாக சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.





