பீஜிங்: அமெரிக்க தொழில்நுட்பத்தின் மீது உள்ள சார்பைக் குறைக்கும் நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் கணினிகளில் இருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை நீக்கி, லினக்ஸ் இயங்குதளத்திற்கு மாறுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மைக்ரோசாப்ட்டுக்கு இருப்பதாகவும், விண்டோஸ் பல துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுவதாகவும் செய்தி குறிப்பிடுகிறது. இருப்பினும், வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த முடிவை சீன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்ததாகவும், சில அரசு சார்ந்த நிறுவனங்கள் உடனடியாகவே தங்களின் கணினிகளில் இருந்து விண்டோஸ் பயன்பாட்டை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 2027 பிப்ரவரியில் விண்டோஸ் 10 பயன்பாட்டிலிருந்து நீக்கப்படவிருந்த நிலையில், திட்டமிட்டதை விட சில மாதங்களுக்கு முன்பே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
முக்கியமான மற்றும் நுணுக்கமான தரவுகளை கையாளும் பணிகளில், உள்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு அரசு அமைப்புகளை சீனா ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், இந்த ஆண்டு ஏப்ரலில் பிரான்ஸ் தனது அரசு துறைகள் விண்டோஸிலிருந்து லினக்ஸுக்கு மாறும் என அறிவித்ததுடன், ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பயன்பாட்டை குறைத்து வருவதாக செய்தி கூறுகிறது.





