சென்னை: முதல்வர் அலுவலகத்தை இடமாற்றுவது தற்காலிக ஏற்பாடே என்றும், அது முதல்வரைச் சுற்றி பணிபுரியும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவே என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபை விவாதத்தில் தி.மு.க. கொறடா எ.வ.வேலு, கோட்டை கட்டடத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.5.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இடமாற்றம் நடந்தால் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இடவசதி, உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட வசதிகள் குறையும் என ஊழியர்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், டெண்டர்கள் வெளிப்படையாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், முதல்வர் அலுவலக அமைப்புக்கான டெண்டர் ஆன்லைனில் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த டெண்டர் இன்னும் இறுதியாகவில்லை என்றார். தற்போதைய முதல்வர் அலுவலகம் சுமார் 100 சதுரடியில் மட்டுமே இருப்பதாகவும், முதல்வரைச் சுற்றி சுமார் 80 பேர் நெருக்கமாக அமர்ந்து பணிபுரிவதாகவும், அவர்களுக்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை என்றும் தெரிவித்தார்.
முதல்வர் காலை 9:30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்து மாலை 5:30 மணிக்கு செல்கிறார்; அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் சந்திக்க வருகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார். இடமாற்றம் முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காக அல்ல; அவருடன் பணிபுரிபவர்களின் வசதிக்காக தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றார்.





