சென்னை: கோட்டை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் இடப்பற்றாக்குறை காரணமாக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு தற்காலிகமாக மாற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் தெரிவித்தார்.
விவாதத்தில் அவர் கூறியதாவது: தற்போதைய முதல்வர் அலுவலகம் சுமார் 100 சதுரடி அளவிலேயே உள்ளது. முதல்வரைச் சுற்றி சுமார் 80 பேர் அமர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள், குறிப்பாக கழிப்பறை உள்ளிட்டவை போதியதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு திமுக கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பி, அலுவலக அமைப்புக்காக ரூ.5.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இடமாற்றத்தால் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட வசதிகள் குறைவதாக புகார்கள் இருப்பதாகவும் கூறினார். மேலும் வெளிப்படைத்தன்மை குறித்து கூறப்பட்ட நிலையில் ஆன்லைன் டெண்டர் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
அதற்கு அமைச்சர், இந்தப் பணிக்கான டெண்டர் இன்னும் முடிவாகவில்லை என்று பதிலளித்தார். இது முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காக அல்ல; அவருடன் பணிபுரிபவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்காலிக ஏற்பாடாக இடமாற்றம் செய்யப்படுவதாகவும், முதல்வர் நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணைப்படி தலைமைச் செயலகத்தில் பணியாற்றி அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டவர்களை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




