புதுடில்லி: இந்திய விதிகளை மீறினால், குறிப்பாக குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக தவறுகள் நடந்தால், மெட்டா நிறுவனத்துக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் இதைத் தெரிவித்தன.

மெட்டாவின் சர்வதேச குழுவினருடன் நடந்த தொடர் ஆலோசனைகளில், குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளை கட்டுப்படுத்துவது, சமூக ஊடக உள்ளடக்க கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலோசனைகளுக்குப் பிறகு அந்த விவகாரத்தில் மெட்டா சில நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், பதிவுகள் தொடர்பான முடிவெடுப்பில் மெட்டாவின் ‘அல்காரிதம்’ மற்றும் நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மொழி, கலாசார வேறுபாடுகளை கருத்தில் கொண்டு கண்காணிப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும்; உலகளாவிய நடைமுறைகளை மட்டும் பின்பற்றக் கூடாது என்று அரசு தரப்பு வலியுறுத்தியது.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவது கருத்துகளை ஒடுக்குவதற்காக அல்ல; நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதை உறுதி செய்வதும், சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதும் தான் நோக்கம் என அமைச்சக வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், வாட்ஸ்அப்பில் மொபைல் எண் இல்லாமலேயே ‘யூசர் நேம்’ மூலம் செய்தி அனுப்பும் வசதி தொடர்பாகவும் அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வசதி ஆள்மாறாட்டம், இணைய மோசடி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ போன்ற மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது; இதேபோன்ற வசதிகள் பிற தகவல் பரிமாற்ற செயலிகளிலும் வரக்கூடும் என்பதால், பொதுவான விவகாரமாக பரிசீலிக்கப்படுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்படும் பதிவுகளுக்கு தெளிவான அடையாளம் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பயனர்கள் தாங்கள் பார்க்கும் பதிவு உண்மையா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என வட்டாரங்கள் கூறின.