தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிப்பாணையாலும் இதற்கு தடையில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணையில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன், மத்திய அரசு தரப்பில், உள்துறை அமைச்சகம் ஜூலை 9 அன்று வெளியிட்ட அறிவிப்பாணைப்படி வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் தொடர்ந்து பாடப்பட வேண்டும்; அதில் வந்தே மாதரம் முதலில் பாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், மாநிலப் பாடல் குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், மாநிலப் பாடலை இறுதியில் மட்டுமே பாட வேண்டும் என்று சொல்லப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், புதிய அறிவிப்பாணையில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை; அதன் பின்னர் வந்தே மாதரம், இறுதியில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினர். சுதந்திர தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டதை அவர்கள் எடுத்துக்காட்டினர்.
மனு தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பின்னர் வழங்கும் வகையில் ஒத்திவைத்துள்ளது.





