இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபி மற்றும் சகோதரி நொரீன் நியாசியை, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு சந்தித்து பேசினார்.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் முதல் இம்ரான் கான் அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், அவர் சிறையில் மரண படுக்கையில் இருப்பதாகத் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின.
இந்த தகவல்களைத் தொடர்ந்து, அவரை இஸ்லாமாபாதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தினர் வாரந்தோறும் சந்திக்கவும், மகன்களுடன் தொலைபேசியில் பேசவும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த உத்தரவின் பின்னணியில், புஷ்ரா பீபி மற்றும் நொரீன் நியாசி இருவரும் அடியலா சிறையில் இம்ரான் கானை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்.
சந்திப்பின்போது, இம்ரான் கானை ஷிபா மருத்துவமனைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து நொரீன் அவரிடம் தெரிவித்தார். மேலும் சில சட்ட தொடர்பான விவகாரங்களும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.





